
ஒரு தடவை ஒரு ஈ சுற்றி வந்து கொண்டு இருந்தது. திடீர் என அதற்கு தான் யார் என மறந்து விட்டது. அப்பொழுது அங்கே ஒரு கன்று மேய்ந்து கொண்டு இருந்தது. கன்றிடம் சென்ற ஈ இவ்வாறாக கேட்டது,
கொழு கொழு கன்றே என் பெயர் என்ன?
அதற்கு கன்று சொன்னது, எனக்கு தெரியாது, எனது தாயாருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். உடனே ஈ கன்றின் தாயான பசுவிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, என் பெயர் என்ன?
அதற்கு பசு சொன்னது, எனக்கு தெரியாது, என்னை மேய்க்கிறானே இடையன் அவனை கேளு என்று. உடனே ஈ பசுவை மேய்க்கும் இடையனிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, என் பெயர் என்ன?
அதற்கு இடையன் சொன்னான், எனக்கு தெரியாது, என் கையில் உள்ள கோலை கேள் என்று. உடனே ஈ இடையனின் கையில் உள்ள கோலிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, என் பெயர் என்ன?
அதற்கு கோல் சொன்னது, எனக்கு தெரியாது, நான் வளர்ந்த கொடிமரத்தை கேள் என்று. உடனே ஈ கொடிமரத்திடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, என் பெயர் என்ன?
அதற்கு கொடிமரம் சொன்னது, எனக்கு தெரியாது, என் மீது வந்து அமர்ந்து இளைப்பாறும் கொக்கை கேள் என்று. உடனே ஈ கொக்கிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, என் பெயர் என்ன?
அதற்கு கொக்கு சொன்னது, எனக்கு தெரியாது, நான் சென்று நீராடும் குளத்தை கேள் என்று. உடனே ஈ குளத்திடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, என் பெயர் என்ன?
அதற்கு குளம் சொன்னது, எனக்கு தெரியாது, என்னுள் வாழும் மீனிடம் சென்று கேள் என்று. உடனே ஈ மீனிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, என் பெயர் என்ன?
அதற்கு மீன் சொன்னது, எனக்கு தெரியாது, என்னை பிடிக்கும் வலையனை சென்று கேள் என்று. உடனே ஈ வலையனிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீனை பிடிக்கும் வலையா, என் பெயர் என்ன?
அதற்கு வலையன் சொன்னான், எனக்கு தெரியாது, என் கையிலுள்ள சட்டியிடம் சென்று கேள் என்று. உடனே ஈ வலையனின் சட்டியிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீனை பிடிக்கும் வலையா, வலையங்கைச்சட்டியே, என் பெயர் என்ன?
அதற்கு சட்டி சொன்னது, எனக்கு தெரியாது, என்னை செய்கிறானே குயவன் அவனிடம் சென்று கேள் என்று. உடனே ஈ குயவனிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீனை பிடிக்கும் வலையா, வலையங்கைச்சட்டியே, சட்டி செய்யும் குயவா, என் பெயர் என்ன?
அதற்கு குயவன் சொன்னான், எனக்கு தெரியாது, நான் சட்டி செய்வதற்கு எடுக்கும் மண்ணிடத்தில் சென்று கேள் என்று. உடனே ஈ குயவன் எடுக்கும் மண்ணிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீனை பிடிக்கும் வலையா, வலையங்கைச்சட்டியே, சட்டி செய்யும் குயவா, குயவன் எடுக்கும் மண்ணே, என் பெயர் என்ன?
அதற்கு மண் சொன்னது, எனக்கு தெரியாது, என் மேல் வளரும் புல்லிடம் சென்று கேள் என்று. உடனே ஈ மண்ணிலுள்ள புல்லிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீனை பிடிக்கும் வலையா, வலையங்கைச்சட்டியே, சட்டி செய்யும் குயவா, குயவன் எடுக்கும் மண்ணே, மண்ணிலுள்ள புல்லே, என் பெயர் என்ன?
அதற்கு புல் சொன்னது, எனக்கு தெரியாது, என்னை மேய வரும் குதிரையிடம் சென்று கேள் என்று. உடனே ஈ குதிரையிடம் சென்று கேட்டது.
கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, கன்மேய்க்கிறானே, ஆயங்கை கோலே, கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்து கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே, மீனை பிடிக்கும் வலையா, வலையங்கைச்சட்டியே, சட்டி செய்யும் குயவா, குயவன் எடுக்கும் மண்ணே, மண்ணிலுள்ள புல்லே, புல்லை மேயும் குதிரையே, என் பெயர் என்ன?
உடனே குதிரை ஈ ஈ ஈ ஈ ஈ..................... என கணைத்தது, அப்பொழுதுதான் ஈ’யிற்கு தான் ஒரு "ஈ" என ஞாபகம் வந்தது.
No comments:
Post a Comment